திருமறை வளர்ச்சியில் ஏழாலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் நில வளமும், நீர் வளமும் அமைந்த வலிகாம் பிரதேசத்தில் புனிதர் யோசவ்வாஸ் சில்லாலையில் கால் பதித்த வரலாறும், தவத்திரு தோமஸ் அடிகளாரின் தோலகட்டி செபமாலைதாசர் சபையின் வரலாறும் யாழ் திருமறை வரலாற்றில் பிரதான இடத்தைப்பிடித்து விட்டன. ஏழாலையின் இரண்டு பக்கத்திலும் பண்டத்தரிப்பு பற்றிமாபதியும் , புனித சூசையப்பர் சபையாலும் திருக்குடும்பக் கன்னியர் சபையாலும் வளமாக்கப்பட்ட இளவாலை மற்றும் போர்த்துக்கேய ஆட்சிக்காலத்தில் திருமறையில் இணைந்த கோப்பாய் அச்சுவேலி ஆகிய கிராமங்களுக்கு நடுவே சைவமும் தமிழும் செழித்தோங்கிய ஏழாலை கிராமத்தில் வாழ்ந்த எமது முன்னோர் கிறிஸ்துவை அறிந்து திருமுழுக்கு பெற்றமை தனித்துவமானது. இயற்கையளித்த செம்மண்ணினில் பயிர்செய்து பாலுக்காக பசுவை வளர்த்து பாங்காக வாழ்ந்த எம் முன்னோர் கமத்தொழிலின் பாதுகாவலர் புனித இசிதோருக்கு கிராமத்தின் நட்ட நடுவே ஆலயத்தை அமைத்து இறைவனைப் போற்றிய நூற்றிருபது ஆண்டு இறை மீட்பின் இரகசியத்தை பறைசாற்றுகின்றது.

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு மாட்டுவண்டியில் திருப்பலியை நிறைவேற்ற வந்த ஐரோப்பிய குருவை பெரியோர்களுடன் வேடிக்கையாக பார்த்து நின்ற பரமானந்தம் பொன்னம்பலம் என்ற சிறுவன் பிற்காலத்தில் கொழும்புத்துறையில் புனித சூசையப்பர் அருட்சகோதரர்களால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலையில் கல்விகற்று திருமுழுக்குப்பெற்று ஆசிரியராக வெளியேறினார். எம் கிராம மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட பொன்னுச்சட்டம்பியார் என்ற பரமானந்தன் பொன்னம்பலம் ஏழாலைக் கிராமத்தில் பாடசாலைகள் இல்லாத காரணத்தால் ஆயர் கென்றி யூலனின் வழிகாட்டலில் 1894ம் ஆண்டளவில் ஒரு திண்ணைப் பாடசாலையை ஆரம்பித்தார். பொன்னுச் சட்டம்பியாருக்கு உதவியாக ஏழாலைதெற்கு ஆயரின் அனுமதியுடன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். திண்ணைப் பாடசாலை வளர்ச்சியடைந்து தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையாக மாற்றப்பட்டது. புனித இசிதோர் ஆலயமும் ஓலைக் கொட்டிலாக அமைக்கப்பட்டு ஆயர் கென்றி யூலனால் 1896ம் ஆண்டு மாசிமாதம் 25ம் திகதி அச்சுவேலி புனித சூசையப்பர் பங்குடன் இணைக்கப்பட்டது. அச்சுவேலி ஆலய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை சந்தியாகு நீக்கிலாப்பிள்ளை (அ.ம.தி) அவர்களால் ஒவ்வொரு ஞாயிறும் காலை 5.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டதாக அறியப்படுகிறது.

ஓலைக் கொட்டிலாக இருந்த ஆலயத்தின் மூலமாக ஏற்பட்ட சமூக மறுமலர்ச்சியும் ஆன்மீக தேடலும் வலுவடைந்து வருவதை சகிக்க முடியாத ஒருவர் ஆலயத்தை தீக்கிரையாக்கினர். இதற்கு மாற்று வழிதேட எண்ணிய நேரத்தில் கிரமாத்தில் அன்பாக அழைக்கப்பட்ட புண்ணியசிங்கம் எனப்பெயர் கொண்ட புண்ணியர் அப்பா தனது காணியை திருச்சபைக்கு கையளித்து குடும்பமாக திருமறையில் இணைந்து கொண்டார். இவரின் மனமாற்றத்திற்கு கட்டியம் கூறுவது போல் பிறிதொரு நிகழ்வும் நடந்தது ஏழாலைக் கிராமத்தின் முதல் விதானையாராக இருந்தவர் சின்னட்டியார் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி என்பவர் தனது மூத்த மகளான பூதாத்தை என்பரை கிறீஸ்தவரான பரமானந்தம் பீலிக்ஸ் பொன்னம்பலத்திற்கும், மற்றைய மகளான அன்னப்பிள்ளையை கிறீஸ்தவரான வல்லிபுரச்சட்டம்பியாருக்கும் திருமணத்தை நடத்தி ஏழாலையில் சமய ஒற்றுமையை ஏற்படுத்தினார். இவ் இருவரும் ஆன்மதாகம் கொண்டவர்களாகவும் செயலூக்கம் உள்ளவர்களாகவும் காணப்பட்டனர். கிராமத்து மக்களால் பொன்னுச்சட்டம்பியார் என அன்பாக அழைக்கப்பட்ட பொன்னம்பலம் தேவ அன்னையில் பற்றுறுதி கொண்டவராய் மருத்துவம் செய்து மக்களின் நோய்களையும் போக்கினார். இதன் காரணமாக பொன்னுச் சட்டம்பியார் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கண்ணியமானவராக கருதப்பட்டதால் கத்தோலிக்க திருச்சபையின் இணைப்புப் பாலமாக செயல்பட்டார். இப் பொன்னான பின் புலத்தில் யாழ்ப்பாண திருச்சபையின் வளர்ச்சிப் பாதையில் 1905ம் ஆண்டு கார்த்திகை முப்பதாம் திகதி புனித இசிதோர் ஆலயத்திற்கான அடிக்கல்லை அருட் தந்தை ஏனெஸ்ற் ஜென் (அ.ம.தி) நாட்டினார்.

அருட்தந்தையவர்கள் யாழ் ஆயர் கலாநிதி கென்றியூலனின் வழி நின்று 116 அடி நீளம் கொண்டதும் 74 அடி அகலம் கொண்டதுமான திருச்சிலுவை அமைப்பைக் கொண்ட ஆலயத்தின் கட்டுமானப் பணியை ஆரம்பித்து வைத்தது ஏழாலைக் கிறீஸ்தவர்கள் செய்த தவப்பயனே. ஆயர் அவர்கள் எமது ஆலய கட்டுமானப் பணியில் காட்டிய பரிவும் ஆர்வமும்மேலோங்கி யிருந்தபடியால் ஜேர்மன் நாட்டு பேருபதாரிகளின் நிதியும் பணச்சடங்கின் மூலமாக சேகரிக்கப்பட்ட ரூபா 500 யையும் சேர்த்து ஆலயத்தின் அத்திவார வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.இளவாலை, தோலகட்டி பங்குகளில் பங்குத் தந்தையாக இருந்த வெயிறெட் கென்றி அ.ம.தி என்பவர் காலத்திலே வசதிகள் கொண்ட பங்குமணிமனையுடன் ஆலயமும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் புனித இசிதோர் ஆலயம் ஆனைக்கோட்டை பங்குடன் இணைந்திருந்தாகவும் 1905ம் ஆண்டில் அருட்தந்தை ஜென் அடிகளாரால் அத்திவாரக்கல் நாட்டப்பட்டதாகவும் நல்லூர் ஞானப்பிரகாசர் அடிகள் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

எமது ஆலயத்தின் கட்டுமானப் பணிக்கு தொடந்து நிதி சேகரிக்கும் நோக்கமாக ஏழாலை கிறீஸ்தவர்களின் தவப் புதல்வனாக கருதப்பட்ட பரமானந்தம் பொன்னம்பலம் என்பவர் 1909 ம் ஆண்டில் புனித இசிதோரின் வாழ்க்கை வரலாற்றை அம்மானைகளாக வெளியிட்டு பணம் படைத்தோரிடம் நிதிபெற்று ஆலயத்தின் கட்டுமானப்பணியின் பெரும்பகுதியை நிறைவு செய்தார். இவ் அம்மானையை தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அந்தோனி இராசு எம்.எ(தமிழ்) எம்.எ (இதழியல்) பி.எச்.டி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“புனித இசிதோரின் வரலாற்றை இனிய எளிய நடையில் இயம்பும் சிறப்புக் கருதியே இதனை வெளியிட முன்வந்தேன் மக்கள் இம் முயற்சியால் பயன்பெறுவார்களாக!) இவரின் தமிழ்த்தொண்டால் புனிதரின் அம்மானை எமது கைக்குக் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம். புனித இசிதோர் அம்மானை பிரதிகள் அருகி வந்த காலத்தில் திருச்சியிலிருந்து எடுத்து வந்த எமது மறைந்த யாழ் ஆயர் பேரருட்திரு.வ.தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களின் முயற்சியை நன்றியோடு நினைவு கூருகின்றோம். இவ் அம்மானையை மீண்டும் மூன்றாம் பதிப்பாக புனிதரின் பெருவிழாவும், பெந்தேகொஸ்தே பெருவிழாவுமாகிய 2005ம் ஆண்டு வைகாசி 15ம் நாள் காலை திருப்பலியின் பின்பு வெளியிட்டு ஏழாலை புனித இசிதோர் பங்கு மக்களும் பங்குத் தந்தையும் பெருமையைத் தேடி கொண்டனர். அதன் பிரதியையும் இணையத்தில் பதிவேற்றியிருக்கின்றோம்.

பொன்னுச்சட்டம்பியாரின் வழிகாட்டலில் யா/புனித இசிதோர் பாடசாலையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் கற்றுத் தேறியவர்கள் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் காலசாலையில் கற்று பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக வெளியேறினார். பெண்கள் உயர் கல்வியைக் கற்க இளவாலை கன்னியர் மடத்தை நாடினார். இவர்களில் சிலர் அருட்சகோதரிகளாகி திருச்சபையின் வளர்ச்சிக்கு தமது பங்களிப்பை வழங்கினர். ஆலயப்பங்கில் பலர் ஆசிரியர்களாக இருந்த படியாலும் திருச்சபையில் முகாமைத்துவத்தில் பாடசாலைகள் இருந்தபடியாலும் ஒழுங்கான கட்டமைப்பு மேலேங்கி இருந்ததை அவதானிக்க முடிகிறது. அயற்கிராம பாடசாலைகளில் எம்மவர் ஆசிரியர்களாக இருந்தபடியால் சிறந்த உறவு பேணப்பட்டது.

புனித இசிதோரின் வருடாந்த திருநாட்களில் சில்லாலை, பண்டத்தரிப்பு நாவாந்துறை ஆனைக்கோட்டை ஆலய மக்களுக்கு நோவினைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் பெரும் எண்ணிக்கையாக மக்கள் ஆலய கூழலில் தங்கி உறவுகளை புதுப்பித்ததாகவும் அறியப்படுகின்றது. பெற்றோர் ஆசிரியர்களாக இருந்தபடியால் பிள்ளைகளும் ஆசிரியர்த் தொழிலை விரும்பினர். “ஏழாலை ஆசிரியர் கிராமம்” எனப் பலராலும் பாராட்டப்படுவதற்கு உரித்துடையவர்களானார்கள். நல்லூர் ஞானப்பிரகாசியரால் புதிதாக உருவாக்கப்பட்ட பங்குத்தளங்களிலும் மன்னார், மாதோட்டம், வன்னிப் பிரதேசங்களிலும் எமது கிராம ஆசிரியர்கள் கடமையாற்றி திருச்சபையின் அப்போஸ்தலிக்க பணிக்கு தம்மை அர்ப்பணித்தனர்.

பங்கு மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க திருமணத்தின் மூலமாக அளவெட்டி, சாவச்சேரி, பண்டத்தரிப்பு, இளவாலை, அச்சுவேலி ஆகிய கிராமங்களில் உறவுகளை ஏற்படுத்தியும் எமது கிராமங்களில் உறவுகளை ஏற்படுத்தியும் எமது கிராமத்துக்குள்ளேயும் உறவினரான இந்துக்களை திருமறையில் இணைத்து திருமணங்களை நடத்தி சிறந்த கத்தோலிக்க குடும்பங்களை உருவாக்கினர். இந்துக்களை திருமறையில் இணைத்து திருமணங்களை நடத்தி சிறந்த கத்தோலிக்க குடும்பங்களை உருவாக்கினர். இக்கால பகுதியில் சிங்கப்பூர் மலேசியா, நாடுகளில் வாழ்ந்த எம்மவர் இரண்டாம் உலகமகாயுத்தம் முடிவிற்கு வரவே நாடு திரும்பினர். இவர்களின் வரவால் ஆங்கிலமொழித் தொடர்பின் முக்கியத்துவம் உணரப்பட்டு பெற்றோர் ஆங்கில மொழி கற்பிக்கப்படும் பாடசாலைகளிலும் பங்கிலும் ஐரோப்பிய சுதேசகுருக்களின் கலப்புத்தன்மை தேவ அழைத்தலுக்கு வலுவூட்டியது. பங்கு மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தும் ஒப்பீட்டு நோக்கில் தேவ அழைத்தல் பாராட்டக்கூடியதாக காணப்படுகிறது. பங்கு மக்கள் திருச்சபையின் வளர்ச்சிக்கு தமது இயல்புக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப துணை நின்றனர்.

இதன் வெளிப்பாடாகவும் விசுவாச வளர்ச்சிக்கு சான்று பகர்வதாகவும் ஆறு அருட்தந்தைகளும் 26 அருட்சகோதரிகளும் இரண்டு அருட்சகோதரர்களும் ஏழாலைக் கிராமத்தில் இருந்து இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் பணி செய்தவற்கு தம்மை அர்ப்பணித்தனர். ஏழாலை தெற்கு சூராவத்தையில் புனித திரேசா ஆலயத்திற்கு 1948ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் அல்லும் பகலும் பாடுபட்டு நிதியை வாரிவழங்கி இறைவனுக்கு துதிபாட அழகான ஆலயத்தைக் கட்டி பெருமையைத் தேடிக்கொண்டனர். இவ்வாலயத்திற்கான நிலத்தை சிங்கப்பூரில் P.W.D ஓவசியராக கடமையாற்றிய பொ.இராசட்ணம் குடும்பத்தினர் வழங்கினர்.

ஏழாலை கிராமத்தில் தென்மேற்கு நுளைவாயிலில் நல்லூர் ஞானப்பிரகாசர் சுவாமியால் ஆரம்பிக்கப்பட்ட புதுமை மாதா ஆலயம் தடைகள் காரணமாக நீண்டகாலம் செயலற்றிருக்க மீண்டும் 1985ம் ஆண்டு பங்குத்தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் முயற்சியால் ஓய்வுபெற்ற அதிபர் அருமைநாயகம் அவர்களால் வழங்கப்பட்ட நிலத்தில் லூர்து அன்னையின் பெருவிழா அமைக்கப்பட்டது. அன்னையின் பெருவிழா மாசி 11ம் திகதி ஏழாலை மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆசிரியர் வ.யோஅருமைநாயகம் 2ம் தர அதிபராக ஓய்வு பெற்று 2003 ஆண்டில் ஏழாலை புனித இசிதோர் ஆலய வரலாற்றை எழுதுவதற்கு துணை நின்றார்.

எமது நாட்டில் இரு சகாப்த காலத்திற்கு மேலாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் மேலாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் எமது கிராமத்தின் பொருளாதார, சமூக, ஆன்மீக வளர்ச்சிகள் தடைப்பட்டும். இளைஞர்கள் பாதுகாப்புத்தேடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தும் மற்றும் பாரிய இடம் பெயர்வுக்கு முகம் கொடுத்தும் எமது பங்கு தற்காலிக பின்னடைவை எதிர்நோக்கியது. எனினும் எமது நீண்ட நூறு ஆண்டு கால விசுவாச வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பணியை இறை திட்டமாக ஏற்று புனிதரின் துணையுடன் முன்னெடுத்து நூற்றாண்டுவிழாவை சிறப்பாக கொண்டாடினோம். நூற்றாண்டுவிழாவிற்கு பின்னர் இறையாசியுடனும் பங்குமக்களின் பாரிய முயற்சியாலும் புலம்பெயர் உறவுகள் பலரின் தராள மனதார உதவியாலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் பல ஆன்மிக எழுச்சியாலும் சிறப்பாக திகழ்கின்றது. தொடர்ந்தும் இறைவன் அருளாலும் எமது பாதுகாவலர் புனித இசிதோர் துணையுடன் என்றும் எம்மோடு இருக்கும் என விசுவாசிப்போம்.