புதுமைகள் பல புரிந்த புனித இசிதோர்

புனித இசிதோர் ஸ்பெயின் நாட்டிலே மட்றிட் நகருக்கண்மையிலுள்ள ஓர் ஊரில் 1070ம் ஆண்டளவில் பிறந்தார். இவரது பெற்றோர் ஏழைக் குடியானவர்கள் ஆனால் மிகுந்த பக்தி விசுவாசமுடையவர்கள். இசிதோரின் இளமைப் பருவத்திலேயே இறைவனை அன்பு செய்யவும் பாவத்தை வெறுக்கவும் அவருக்கு கற்றுக் கொடுத்தனர் ஏட்டுக்கல்வி பெற அவருக்கு வாய்ப்பு இருக்கவில்லை தூய ஆவியின் அருளினாலேயே அவர் இறைஞானத்தைப் பெற்றுக் கொண்டார் அவரது பெற்றோர் இளம்வயதினிலேயே அவரை ஜோண் டி வேர்காஸ் (John De Vergas) என்னும் பணக்காரப் பண்ணையாரிடம் கூலி வேலைக்குச் சேர்த்துவிட்டனர். தமது வாழ்நாள் முழுவதும் அவர் கூலி வேலையிலேயே நிலைத்திருந்தார். ஜோன் டி வேர்காஸ் உடைய பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது புனித இசிதோர் மரியா தொரிபியா என்னும் உத்தம கிறிஸ்தவ பெண்ணை மணந்து கொண்டார். அவர்களின் வாழ்வை இறைவன் ஆசீர்வதித்து இலான் என்னும் பெயருடைய மகனை அளித்தார் அவர்கள் தம்மைப் போலவே தமது மகனை பக்தியில் சிறந்த விளங்குமாறு அவனை வளர்த்து வந்தனர். அவருடைய வாழ்விலும் துன்பம் நேர்ந்தது ஒரு நாள் அவர்களது மகன் ஆழமான ஒரு கிணற்றினுள் விழுந்து விட்டான். அவனை மீட்க முடியாத பெற்றோர் இறைவனை நோக்கி மன்றாடினார்கள். புதுமையாக கிணற்றின் நீர் நிலமட்டித்துக்கு உயர்ந்து சிறுவனை எவ்வித ஊறுமின்றி உயிருடன் மேலே கொண்டு வந்தது. தமது மகன் பொருட்டு இறைவன் காட்டிய தயவுக்கு நன்றியாக தம்பதியர் இருவரும் தமது மணவாழ்வில் விரதத்துவம் மேற்கொள்வது என இறைவனுக்கு வாக்குத் தந்தம் செய்து தனித்தனியே வாழந்து வரலாயினர் சில காலத்தின் பின் அவர்களது மகன் வாலிப வயதில் இறந்து விட்டான்.

புனித இசிதோர் தமது எஜமானனின் பண்ணையில் வேலை செய்து வந்தார், காலையில் வேலைக்குச் செல்லுமுன் அவர் மட்றிட் நகரிலுள்ள ஓர் ஆலயத்தில் திருப்பலி காண்பது வழக்கம். இதனால் அவர் அடிக்கடி வேலைக்குப் தாமதமாக வர நேர்ந்தது இதனால் அவரது சக தொழிலாளர் எஜமானுக்கு இது பற்றி முறையிட்டனர். இது பற்றி விசாரிக்கப்பட்ட போது புனித இசிதோர் அதை மறுக்கவில்லை. அவர் எஜமானுடன் “ஐயா ஏனைய தொழிலாளரைவிட நான் வேலைக்குப் தாமதமாக வருவது உண்மையாயிருக்கலாம் ஆனால் நான் செபத்தின் செலவிடும் நேரத்தினை ஈடு செய்வதற்காக மேலதிக வேலை செய்து கடுமையாக உழைக்கிறேன். எனது வேலையை மற்றவர்களுடைய வேலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள் நான் உங்களை ஏமாற்றியதாகக் கருதினால் எனது சொந்தப்பணத்திலிருந்து அதற்கு ஈடுசெய்ய ஆயத்தமாக இருக்கிறேன்” என்று கூறினார். எஜமான் ஒன்றும் பேசவில்லை ஆனால் அவர் சந்தேகம் தீர்த்தபாடில்லை. உண்மையை அறிய வேண்டுஅமன்று ஜோன் டி வேர்காஸ் ஒரு நாள் ஓர் மலைக்குகையில் ஒளிந்திருந்தார் அங்கே அவர் வெகு நேரம் காத்திருந்த பின்னரே புனித இசிதோர் வந்தார் அப்பொழுது ஜோண் டி வேர்காஸ் தான் ஊழியனைக் கண்டிக்க ஓடிப்போகையில் ஆச்சிரியமான காட்சியை கண்டார்.

வயலின் மத்தியில் வெள்ளை நிறமுள்ள இரண்டு சோடி மாடுகள் இரண்டு கலப்பைகளை இழுக்கிறதாகவும் அவைகளை வழி நடத்த சூரியனையொத்த பிரகாசமான ஆடைகளை அணிந்தவர்களாக இரண்டு வாலிபர்கள் நிற்பதையும் இவர்கள் மத்தியில் புனித இசிதோர் வெகுவிரைவாகவும் ஒழுங்காகவும் வயலை உழுவதையும் கண்ணுற்றார். ஒருபோதும் காணாத இந்தக் காட்சியை கண்ட ஜோண் டி வேர்காஸ் பயந்து திடுக்கிட்டு புனித இசிதோருக்கு இரண்டு தேவ தூதர்கள் உதவியாக நிற்கிறார்களே என்று பயந்தவராய் அவருக்கண்மையில் போகத்துணியவில்லை. இப்பொழுது அவர் கண்ட காட்சி மறைந்து போயிற்று. ஜோண் டி வேர்காஸ் தாம் கண்ட காட்சியை பற்றி விசாரித்த போது புனிதர் ஆச்சிரியப்பட்டு “ஐயா நான் தனித்தே வேலை செய்கிறேன். எனக்கு சக்தியளிக்கும் இறைவனைத் தவிர வேறொருவரும் எனக்கு உதவியதில்லை” என்று பதிலளித்தார். புனித இசிதோர் உழுத வயலில் மும்மடங்கு பலன் கிடைத்ததாகவும் மற்றோரு வரலாறு கூறுகின்றது.

ஒரு நாள் புனித இசிதோர் எசமானாகிய ஜோண் டி வேர்காஸின் மகள் இறந்த போது புனித இசிதோர் அவளை உயிர்ப்பித்தார். தமது எஜமானின் தாகத்தை தீர்க்க உலர் நிலத்தில் இருந்து நன்னீர் ஊற்று வெளிப்படச் செய்தார் அன்று தொடங்கி இன்று வரை இந்த ஊற்றுநீர் பாய்ந்து கொண்டேயிருக்கிறது. இப் புதுமையான ஊற்றுநீர் மூலமாக புனித இசிதோரின் பரிந்துறையில் வியாதிக்காரர் மற்றும் விசுவாசிகள் பல நன்மைகள் அடைகின்றனர். ஒரு நாள் புனித இசிதோர் புனித மரிய மதலேனா தேவாலயத்தில் செபித்துக் கொண்டிருக்கையில் சிறுவர்கள் ஓடிவந்து அவருடைய கழுதையை கொடிய ஓநாய் கொன்று தின்னப்போவதாக முறையிட்டனர். புனித இசிதோர் எவ்வித சலனமும் அற்றவராய் “ஆண்டவருடைய சித்தம் எப்படியோ அவ்வாறே நடக்கட்டும்” எனக் கூறி தம்முடைய செபம் முடிந்த பின் சென்று பார்த்த பொழுது ஓநாய் இறந்திருப்பதையும் கழுதை உயிரோடு இருப்பதையும் கண்ணுற்று இது ஆண்டவருடைய செயல் என்று விசுவாசித்து இறைவனுக்கு நன்றி கூற அவ்வாலயத்திற்கு திரும்பவும் சென்றார். இன்னொரு நாள் புனித இசிதோர் அதை உயிர்பெறச் செய்தார். எஜமானும் சக தொழிலாளரும் புனித இசிதோர் செய்த புதுமைகளைக் கண்டு அவர் மட்டில் பெருமதிப்புக் கொண்டார்.

இப்புதுமைகள் அவரின் இறை நம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக் காட்டுக்கள் ஆகும். புனித இசிதோர் மறை மாவட்டத்தை ஆட்சி செய்யவில்லை வயலில் வேலை செய்தே இறைவனுக்குப் பணிபுரிந்தார். அவர் ஒரு சாதாரண உழவன் இவரது பேச்சில் தெளிவும் நேர்மையும் இருந்தது நடத்தையில் உண்மை இருந்தது. இவரது விசுவாசம் தூய்மையானது உறுதியானது.

அவர் தம்மிடம் இருந்தவற்றை ஒரு வேளை உணவைத் தானும் ஏழைகளோடு பகிர்ந்து கொண்டார். அன்போடும், தாராள உள்ளத்தோடும் நல்லெண்ணத்தோடும் அவர் கொடுத்தபடியால் அவரது கொடைகள் இரு மடங்கு சிறந்ததாகத் தோன்றின. அவரது தாராள குணம் பற்றி பல புதுமைகள் கூறப்படுகின்றன. அவர் தமது எளிய உணவை ஏழைகளோடு பகிர்ந்து கொள்வது வழக்கம் ஒரு நாள் தமது பக்திச்சபையினர் நடத்திய விருந்தில் கலந்து கொள்வதற்காக ஆலயத்திற்கு வந்து கொண்டிந்த போது வழியில் கண்ட ஒரு பிச்சைக்காரர் கூட்டத்தையும் கூட அழைத்து வந்தார். விருந்துக்குப் பொறுப்பானவர்களுக்கு இது எரிச்சலூட்டியது. “இத்தனை பேருக்கும் எம்மால் உணவளிக்க முடியாது உமக்குரிய பங்கு மட்டும் தான் இங்குள்ளது” என்று கூறினார்கள். அவரோ “அது போதும்” என்றார். புதுமையாக அவ்வுணவு பல்கிப் பெருகி வந்திருந்த அனைவருக்கும் உணவளிக்க கூடியதாயிருந்தது. ஒரு மனிதனுக்கோ அல்லது விலங்கிற்கோ நன்மை செய்யக்கூடுமாயிருந்து போது அவர் செய்யாமல் விட்டதில்லை. ஒரு நாள் மாவரைப்பதகாக அவர் தானியத்தை ஆலைக்குக் கொண்டு செல்கையில் பனி உறைந்த கடினமாயிருந்த நிலத்திலே பறவைக் கூட்டம் உணவை தேடிக் கொண்டிருந்ததைக் கண்டார். பார்ப்போரின் பசிகரிப்புக்கு ஆளான போதும் அவர் அப்பறவைகளின் மேல் இரக்கம் கொண்டு தம்மிடமிருந்த தானியத்தின் அரைவாசியை நிலத்தில் கொட்டிவிட்டுச் சென்றார். ஆயினும் அவர் ஆலையை அடைத்த போது அவரது பை நிறைந்தே இருந்தது மாவரைக்கப்பட்ட போது எதிர்பார்த்ததை விட இரு மடங்கு கிடைத்தது அவரது அளவற்ற பிறரன்பு காரணமாக அவரது சமகாலத்தில் வாழ்ந்த மக்கள் அவரைப் பெரிதும் மதித்து ஒரு புனிதர் எனப்போற்றினார்.

இவர் தேவ நற்கருணையில் மட்டிலும் தேவதாயின் மட்டிலும் ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருச்சபை வாழ்வில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டவர். இதனால் தமது நகராகிய மட்றிட் நகர மக்கள் அதன் குழந்தைகள், வலுவற்றோர், பொதுவாக வயிற்றுப்பசி ஆன்மிக பசியினால் துன்புறும் அனைவருடனும் இறைவனது சகல படைப்புக்களுடனும் தம்மை ஒன்றாக கருதியதால் புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு ஒரு விதத்தில் முன்னோடியாக இருநதார் எனக் கருதப்பட்டார்.

புனித இசிதோர் 15 வைகாசி 1130 ஆம் ஆண்டு தமது 60 தாவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். புனித இசிதோரின் திருச்சரீரம் புனித அந்திரே அப்போஸ்தலர் ஆலயத்திற்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவ்விடம் காலத்திற்கு காலம் நீர் ஓட்டம் வந்து பாய்ந்து கொண்டிருந்தமையால் அவரின் உடல் அழிவுற்றிருக்க கூடியதாக இருந்தது 40 ஆண்டுகளுக்கு பின்னும் அழியாதிருந்தது அவ் ஆலயத்தில் வேலையாளாக இருந்த ஒருவருக்கு புனித அந்திரே அப்போஸ்தலரின் ஆலயத்தில் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று காட்சியில் கூறப்பட்டது. புனித இசிதோர் ஏழையாகவும் பண்ணை வேலை செய்து வந்தவர் ஆனபடியாலும் அந்த கட்டளை நிறைவேற்றபடவில்லை. எனவே புனிதரின் சரீரம் குறிக்கப்பட்ட ஆலயத்தில் அடக்கம் செய்யப்படும் வரை அந்தநபர் இடைவிடாமல் வியாதியால் வேதனைப்பட்டார். மீண்டும் புனித இசிதோர் பக்தியுள்ள பெண் ஒருவருக்கு தரிசனமாகி தனது உடலை புனித அந்திரே அப்போஸ்தரின் ஆலயத்தில் அடக்கம் செய்யும்படி கூறினார். அப்பெண் குருக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அறிவித்து புனிதரின் புதைகுழியை தோண்டிப் பார்த்த பொழுது அவரின் திருஉடலும் உடையும் எவ்வித பழுதுமின்றி மதுர வாசனை வீசுவதாயும் இருந்தது. புதை குழியில் இருந்து புனிதரின் சரீரம் இரண்டாம் முறை ஆடம்பரமாக அடக்கம் செய்வதற்காக புனித அந்திரே அப்போஸ்தலரின் ஆலயத்திற்கு எடுத்து சென்றபோது மட்றிக் நகரின் மணிகள் எல்லாம் எவ்வித மனித உதவியும் இன்றி தாமாக அடித்தொலித்தது.

குருடரும் முடவரும் புனித இசிதோரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்து மண்ணை பூசியவுடன் ஆச்சரியமான முறையில் குணமடைந்தனர். அவர் கஸ்டில் அல்பொண்ஸோவுக்கு (Alfonso of Custile) காட்சியளித்து ஒரு இரகசிய வழியைக் காட்டியதாய் கூறப்படுகிறது. இந்தப் பாதை வழியாகவே முஸ்லிம்களைத் தீடீரெனத் தாக்கி 1212 ம் ஆண்டில் லாஸ் நெவாஸ் டி தொலேசா (Las Nevas de Tolasa) என்னுமிடத்தில் அவர்களை வெற்றிகொள்ள முடிந்தது. ஸ்பெயின் நாட்டு அரசன் ஐந்தாவது பிலிப் புனிதருடைய திருப்பண்டங்களைத் தொட்ட போது ஒரு பயங்கர நோயிலிருந்து குணமடைந்தான். இதனால் அவ்வரசன் பழைய பேழைக்குப் பதிலாக ஓர் விலையுயர்ந்த வெள்ளிப் பேழையை செய்து கொடுத்தான் இது போன்ற பல புதுமைகள் நிகழ்ந்தன அவரது கல்லறையில் பலமுறை தெய்வீக இசை கேட்டது. அவர் செவில் நகரின் பாதுகாவலராக விளங்கினார். சில சமயங்களில் விசுவாசிகளுக்கு காட்சியளித்தார். ஸ்பெயின் நாட்டு அரசர்கள் அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரினர். அவரின்  450 ஆண்டுகளுக்கு பின்னர் ரோமாபுரியில் இருந்து வந்த திருச்சபையின் பிதாபிதாக்கள் அவரின் உடல் அழியாமல் நறுமணம் வீசுவதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

12 பங்குனி 1622ம் ஆண்டு பரிசுத்த தந்தை 15ஆம் கிரகோரியாரால் இசிதோருக்கு புனிதர் பட்டம் அளிக்கக்கட்டது. அவருக்குப் புனிதர் பட்டம் அளிக்கையில் 400க்கு மேற்பட்ட பெரும் புதுமைகள் எடுத்து ஆராயப்பட்டன. அதே வேளையில் மிகப் புகழ் பெற்ற ஸ்பானிய நாட்டுப் புனிதர் நால்வருக்கும் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. “ஐந்து புனிதர்கள்” என்று அழைக்கப்பட்டது. புனித லொயாலா, புனித இஞ்ஞாசியார், புனித அபிலா தெரேம்மாள், புனித பிலிப்நேரியார், புனித பிரான்சிஸ் சவேரியார், புனித பிலிப்நேரியார், புனித இசிதோர் ஆகியவராவர்கள். புனித இசிதோரின் திருநாள் மே 15ம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

புனித இசிதோர் குடியானவர்கள், நாட்கூலியாட்கள், கமக்காரர், கிராமிய சமூகங்கள் ஆகியோரின் பாதுகாவலராகக் கருதப்படுகிறார் மட்றிட், லியோன், சரகோசா, செவில் (Mudrid, Leon, Saragossa, Seville) ஆகிய நகரங்கள் அவரைத் தமது பாதுகாவலராக கொண்டிருக்கின்றன. மட்றிட் நகரில் அவரது திருநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
தமது நாளாந்த கடமைகளை செய்து புனித தத்துவத்தை அடைந்த விவாகமான தம்பதியருக்கு எடுத்துக்காட்டாக புனித இசிதோரும் அவரது மனைவியும் விளங்குகின்றனர். நாமும் அவர்களை போன்று வாழும்படி அவர்கள் எமக்காக வேண்டுவார்களாக.

புனித இசிதோரின் மனைவி

முத்திப்பேறு பெற்ற மரியா டிலா கபேசா முத்திப்பேறு பெற்ற மரிய தொரபியா st.Maria Torrbia என அழைக்கப்படும் இவர் புனித இசிதொரின் மனைவியாவார். இவருக்கு ஸ்பெயின் நாட்டில் “முத்திப் பேறு பெற்ற மரிய டிலா கபேசா” (St.Maria Dela Cabeza) என்னும் பெயரில் வணக்கம் செலுத்தப்படுகின்றது. புனித இசிதோரும் முத்திப்பேறு பெற்ற மரிய டிலா கபோசாவும் குடும்ப வாழ்வுக்கு தம்மை அர்ப்பணித்து புண்ணியம் நிறைந்த வாழ்க்கை நடத்தினார்கள். மண்ணை நேசித்து ஏழைகளுக்கு பணி செய்து ஆழமான ஆன்மீக வாழ்வு வாழ்ந்தார்கள். அவர்கள் வறுமையிலும் உத்தம கிறிஸ்தவர்களாக வாழ்ந்தது மட்றிட் நகர மக்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியது.

புனித இசிதோரின் மரணத்தின் பின் முத்திப்பேறு பெற்ற மரிய டிலா கபேசா சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்றும் 1175ம் ஆண்டு கரக்குவின் (Caraquiz) என்னுமிடத்தில் மரித்தார் எனவும் கூறப்படுகின்றது. அவரது மரணத்தின் பின் அவரது தலை (ஸ்பானியா மொழியில் கபேசா என்றால் தலை) ஒரு புனித பொருளாக கருதப்பட்டு 1615 முதல் தொரலகுனா (Torrelaguna) என்னுமிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மரியா டிலா கபேசாவிற்கு 11 ஆவணி 1697ல் பரிசுத்த தந்தையாரால் பத்தாம் சிங்கராயர் (Leox) பன்னிரண்டாம் இனசென்ற் (Innocent – xII) முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்கள் புனித இசிதோரும் முத்திப்பேறு பெற்ற மரியாவும் தோட்டத்தொழிலாளருக்கு பாதுகாவலராக கருதப்படுகினறனர். முத்திப்பேறு பெற்ற மரியா டிலா கபேசா வாழ்நாளில் பல புதுமைகள் செய்தார். வரட்சி காலத்தில் அவரது தலை பவனியாக எடுத்துச் செல்லப்பட்ட வேளை மழை பெய்ததாக கூறப்படுகிறது. அவரது தலை வைக்கப்பட்ட இடமாகிய தொரலகுனாவிற்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து மக்கள் யாத்திரையாகக் செல்கின்றார்கள். முத்திப்பேறு பெற்ற மரியா டிலா கபேசாவின் திருநாள் புரட்டாதி 9ம் திகதி கொண்டாடப்படுகின்றது.