புனித ஞானப்பிரகாசியார் கத்தோலிக்க வாலிபர் சங்கம்

நீர்வளங்கள் மேவ நிலவளங்கள் தான் பொலியும் ஏழாலைப் பதியினிலே புனித இசிதோர் ஆலயப் பங்கில் புனித ஞானப்பிரகாசியார் கத்தோலிக்க வாலிபர் கழகம் அருட்தந்தை பெனற் கொன்ஸ்ரன்ரைன் அவர்களின் வழிகாட்டுதலில் அப்போதிருந்த இளைஞர்களின் அர்பணிப்புடனான கடின உழைப்பினால் உருவாக்கப்பட்டு, 1963.10.07 ஆந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இளைஞர்களிடையே காணப்பட்ட தலைமைத்தும், செறிந்த முற்போக்கான சிந்தனை, சேவை மனப்பான்மை, அயராத முயற்சி போன்ற பண்புகள் கழகத்தின் வளர்ச்சிக்கும் அதனூடாக கிராமத்தின் விருத்திக்கும் வழிகோலின என்றால் அது மிகையாகாது.
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த உயர்திரு. மில்லர் என்னும் நன்கொடையாளரினால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன், அருட்தந்தை யு.சு.பிறவுண் அடிகளாரின் வழிகாட்டுதலில், இளைஞர்களின் கடின உடலுழைப்பில் புனித இசிதோர் ஆலய வளாகத்தின் ஒரு பகுதியில் புனித ஞானப்பிரகாசியார் கத்தோலிக்க வாலிபர் கழகத்திற்கான திறந்த வெளியரங்கு அமைக்கப்பட்டது.
கழகத்தினூடாக இளைஞர்களின் உடல். உள, ஆன்மீக. சமூக மனவெழுச்சித் திறன்களை வளர்க்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் மெய்வல்லுநர் விளையாட்டுக்கள் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் போன்றன ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் பங்குபற்றும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டமை கழகத்தின் சிறப்பம்சமாகும். புனித இசிதோர் ஆலயப் பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்களை நினைவுகூருமுகமாக ‘பிறவுண்’ இல்லம், ‘பாலசுந்தரம்’ இல்லம், ‘ஸ்பம்பதி’ இல்லம் என்னும் பெயர் கொண்ட இல்லங்கள் நிறுவப்பட்டு வருடாந்தம் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் நடாத்தப்பட்டதோடு போட்டியளர்கள் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வுகளுக்கு அருட்தந்தையர்கள், கற்றறிந்த பெரியோர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயரதிகரிகள் போன்றோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புனித ஞானப்பிரகாசியார் கத்தோலிக்க வாலிபர் கழகம் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் செயற்பட்ட விளையாட்டுக் கழகங்களுடன் நட்பு ரீதியான போட்டிகளிலும் பங்குபற்றி திறமையை வெளிப்படுத்தியதுடன் நல்லுறவையும் வளர்த்துக்கொண்டது. இதில் இக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் புகழ் பெற்ற கரப்பந்தாட்டக் கழகங்களான யாழ் நீர்வேலி விளையாட்டுக் கழகம் மற்றும் குப்பிளான் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றினை ஒருங்கிணைத்து மின்னொளியில் விளையாட்டு நிகழ்வினை நடத்தியமை கழகத்தின் ஒரு சிறப்பம்சமாகும். இப்போட்டி 1966.08.22 ஆந் திகதி கழக மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கலையார்வம் மிக்க உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தன்னார்வமாக முன்வந்து தமது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு பல்சுவை அம்சங்களை மேடையேற்றினர். இவர்களால் இருபத்;தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் மேடையேற்றப்பட்டுப் பாராட்டுக்களைப் பெற்றிருந்தன. அவற்றில் கைவிரல்கள், நெஞ்சமே நீ சொல், வீடு சிரிக்கிறது போன்ற நாடகங்கள் பல ரசிகர்களின் வேண்டு கோள்களுக்கிணங்க மீண்டும் மீண்டும் மேடையேற்றப்பட்டமை பாராட்டுதற்குரியதாகவும் இளைஞர்களின் கலையார்வத்திற்கு ஊக்கமூட்டுவதாகவும் அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் மேiயேற்றப்பட்ட சிறந்த நாடகங்கள் – ‘கண்டி அரசன்’ (யாழ்பாணம்), ‘வடக்கும் தெற்கும்’(அளவெட்டி), அலாவுதீன் (கோண்டாவில்) ஆகிய நாடகங்கள் புனித ஞானப்பிரகாசியார் கத்தோலிக்க வாலிபர் கழகத்தின் அரங்கில் மேடையேற்றப்பட்டமையினால், கழகம் ஊர் மக்களின் அபிமானத்தையும் பாரட்டுக்களையும் பெற்றுக்கொண்டமை பெருமைக்குரிய விடையமாகும்.
ஆண்டுதோறும் ஒளி விழா நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டன. ஒளி விழாவினை முன்னிட்டு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் ஏனைவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றியாளர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இயல், இசை, நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இன்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரகாசிப்பதைக் காணலாம்.
வளர்மதி முன்பள்ளி பாடசாலை.
எமது ஆலயச்சூழலில், கத்தோலிக்க மதிப்பீடுகளோடுகூடிய முன்பள்ளி ஒன்றை உருவாக் விரும்பிய புனித ஞானப்பிரகாசியார் கத்தோலிக்க வாலிபர் கழக இளைஞர்கள் தமது அயராத முயற்சியால் 1975ஆம் ஆண்டு பங்குனி மதத்தில் வளர்மதி முன்பள்ளி என்ற பெயரில் முன்பள்ளிப் பாடசாலையை உருவாக்கினர். இங்கு கத்தோலிக்க மாணவர்கள் மட்டுமல்லாமல் எமது ஊரில் வாழ்ந்த இந்து சமய சகோதரர்களின் பிள்ளைகளும் ஒன்றாகப் பயின்றனர். சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின்பால் ஈற்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்பினால் முன்பள்ளியின் செயற்பாடுகள் மேலும் வலுப்பெற்றதோடு அதிக எண்ணிக்கையான மாணவர்கள் இம்முன்பள்ளியில் இணைந்து பயன்பெற்றனர். இவர்கள் இங்கு பெற்றுக்கொண்ட கல்விக்கான ஆதாரம் அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பெரிதும் உறுதுணையாக அமைந்திருந்தது என்பது கண்கூடு.
தொடரும் ……………..
கலைகலாசார நிகழ்வுகள்
புனித ஞானப்பிரகாசியார் க.வா.கழகத்தின் கலை, கலாசார பிரிவில் திரு.ஆ.ஜேசுதாசன், திரு.ம.யோசேப்நாயகம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். எமது கழக அங்கத்தவரால் இருபத்தைந்துக்கு (25) மேற்பட்ட நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. குறிப்பாக கைவிரல்கள், நெஞ்சமே நீ சொல், வீடு சிரிக்கிறது ஆகிய நாடகங்கள் பல தடவைகள் மேடையேற்றப்பட்டன. அன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறந்த நாடகங்களாக இருந்தவற்றை எமது அரங்கில் மேடையேற்றி கிராம மக்களின் பாராட்டை புனித ஞானப்பிரகாசியார் க.வா.கழகம் பெற்றது. அவற்றில் கண்டி அரசன் (யாழ்ப்பாணம்) வடக்கும் தெற்கும் (அளவெட்டி) அலாவுதீன் (கோண்டாவில்) ஆகியவற்றை குறிப்பிடலாம்.
வருடா வருடம் ஒளிவிழா நிகழ்வில் பேச்சுப்போட்டி, நாடகப் போட்டி, கவிதைப் போட்டிகளை நடாத்தி பரிசில்கள் வழங்கப்பட்டன.
இவற்றில் பங்குபற்றியோர் இன்று சர்வதேச அரங்கிலும், தேசிய மட்டத்திலும் பிரகாசிப்பதை அவதானிக்கலாம்.
புனித ஞானப்பிரகாசியார் கத்தோலிக்க வாலிபர் கழக முன்பள்ளி பாடசாலை எமது ஆலய சூழலில் ஒரு முன்பள்ளியை அமைக்க விரும்பி எமது வாலிப கழகத்தினர் திருமதி அரியமலர் சூசைதாஸ் அவர்களை ஆசிரியையாக்கி 1975ம் ஆண்டு பங்குனி மாதம் வளர்மதி முன்பள்ளி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
பெற்றோரின் ஒத்துழைப்பும் பிள்ளைகளின் வரவும் அதிகரிக்கவே ஏழாலையில் சிறந்த முன்பள்ளி என பெயர் கிடைத்தது. ஒளிவிழாக்களிலும் மற்றும் கலாசார நிகழ்விலும் சிறுவர்களின் ஆற்றல் வெளிக்கொணரப் பட்டு ஆசிரியையின் சேவை எல்லோராலும் பாராட்டப்பட்டது.
இப்பகுதியில் இடம்பெற்ற அசாதாரணநிலை காரணமாக தொடர்ந்தும் இவ் முன்பள்ளி செயல்பட முடியாத காரணத்தால் 1990ம் ஆண்டளவில் செயலிழந்தது. மீண்டும் இளையோர் மன்றத்தால் 2006ம் ஆண்டு புனித இசிதோர் முன்பள்ளி என்ற பெயரில் மீள ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவருகின்றது ( இது தொடர் செயற்பாடுகளை புனித இசிதோர் முன்பள்ளி பக்கத்தில் பார்க்கலாம் ).
கழகமாக இருந்த பொழுதும் எமது கிராமத்தின் இளம் யுவதிகளையும் உள்வாங்கி கலை மற்றும் விளையாட்டுத்துறைகளில் அவர்களின் கணிசமான பங்களிப்பு இருந்துவந்திருக்கின்றது. இது அந்தக் காலத்தில் இலகுவான காரியமாக இருந்திருக்க முடியாதென்பதும் பல கிராமங்களில் வாலிபர் சங்கங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கின்றது. கத்தோலிக்க வாலிபர் கழகமாக நிறுவப்பட்டிருந்த போதும் எமது சூழலில் வாழ்ந்த இந்து இளைஞர்களும் தங்களது கழகமாக எண்ணிச் செயற்பட எந்த தடையும் இருக்காத்தால் எமது கிராமத்துக்கு மேலதிக பலம்சேர்ப்பதாகவே இருந்திருக்கிறது.
ஞாபகத்திலுள்ள இந்து இளைஞர்களுள் மகேஸ்வரன், அருமைநாயகம், சிவஞானம் போன்றவர்களை குறிப்பிடலாம். அடுத்த தலைமுறையை சேர்ந்த எமில் ஜேசுரட்ணம், ஜேம்ஸ் தவராஜா, ஜெயச்சந்திரன், ரகுவேந்திரன், பவளநாயகம், மதுரநாயகம் போன்றவர்கள் பெரும்பங்காற்றினர். இவர்களது காலத்திலே தான் ஞானப்பிரகாசியார் திறந்த வெளியரங்கும், வாசிகசலையும் கட்டடப்பணிகள் முழுமை பெற்றன் அவர்கள் காலத்தில் பங்குத்தந்தை வில்வரசிங்கத்தின் வழிகாட்டுதல் இருந்தது.
அடுத்த தலைமுறைக்கு கைமாறிய போது அலோய் றூபன், றணேந்திரன், நிர்மலன், அலெக்ஸ், ஞானநாயகம், விவேகானந்தன், அருமைநாயகம், பேடினன் மோகன் ஆகியோரின் செயற்பாட்டுக் காலம் இக் காலப்பகுதியிலேயே கழக்கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் மதுரைநாயகம், றணேந்திரன், தனநாயகம் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. இந்த இரு தலைமுறையினருடனும் நண்பனாகவும், நல்லாசானகவும், வழிகாட்டியாகவும் செயற்பட்ட ஆசிரியர் திரு சூசைதாஸ் அவர்களை இலகுவில் மறந்து கடந்து செல்ல முடியாது.
இளைஞர்களின் உருவாக்கத்தில் பங்குத் தந்தையர்களுடன் இணைந்து செயற்பட்ட திரு.கொ.றொபேட் (றொபேட் ஐயா) திரு.க.ஞானப்பிரகாசம்(கிளாக்கர் ஐயா), திரு.ச.செல்வரத்தினம் இம்மானுவேல் (இம்மானுவேல் அண்ணர்) அதிபர் பே.சூசைப்பிள்ளை ஆகியோரின் பங்களிப்பு மேலோங்கி நின்றது. எம்மால் அன்போடு அழைக்கப்பட்ட இம்மனுவேல் அண்ணர் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரனாகவும் இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும் இருந்தபடியால் எமது கழக விளையாட்டுப் பிரிவின் பயிற்சியாளராக இருந்து வழிகாட்டினார்.
இடப்பெயர்விற்கு பின்னர் 2005 ம் ஆண்டு பங்குதந்தையாக இருந்த P.F.இராஜசிங்கம் அடிகளார் ஏழாலை சூராவத்தை இளைஞர்களை இணைத்து கத்தோலிக்க இளையோர் மன்றத்தை உருவாக்கி போசகராக திரு.C.A தயாபரன் நியமிக்கப்பட்டு 2016 ம் ஆண்டு செயற்பட்டது.
2006 ம் ஆண்டு எமது இளையோர் மன்றத்தின் தலைவராக ஹிமால் அவர்களும் செயலாராக றொஜினா அவர்களும் பொருளாராக சோபனாவும் தெரிவுசெய்யப்பட்டனர் . இந்த காலத்தில் புனித இசிதோர் முன்பள்ளி என்ற பெயரில் மீள ஆரம்பிக்கப்பட்டது .தொடர்ச்சியாக பல செயற்பாடுகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக நிர்வாக உறுப்பினர்கள் பதவியேற்றபோதும் எந்த தடைகளையும் நீக்கி தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கின்றது.
தொடர்ச்சியாக புனித ஞானப்பிரகாசியார் கலையரங்கில் 2010 ம் ஆண்டு பத்திரிகை படிப்பகம் மீள ஆரம்பிக்கப்பட்டது பத்திரிகைகளை இந்துமத சகோதர்களும் இணைந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது. இதற்கான தளபாட வசதியை கஜந்தன் அவர்கள் அன்பளிப்பு செய்துதந்தார், புனித ஞானப்பிரகாசியர் கழகத்தை ஆரம்பித்து இன்றுவரை முன்னுதாரணமாக இருந்த இளைஞர் யுவதிளை முன்னுதாரணமாக கொண்டு இன்றுவரை அஞ்சலோட்டத்தை ஓயவிடாமல் ஓடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.